Sunday, March 31, 2013
Thursday, March 28, 2013
சந்தித்த வேளை
ஞாபகம் வரவில்லை
எவ்வளவு யோசித்தாலும்
உன்னை சந்தித்த வேளை
ஓட்டி பார்க்கிறேன்
என் மனதை
உன்னை நினைக்க தொடங்கிய நாளை
தேடி பார்க்கிறேன்
நீ முழுதாய் என்னை
ஆக்கிரமித்த நாளை
ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை
எந்த நிமிடம் நிகழ்ந்தது என்று
உன் மீதான ப்ரியம்
அதனால் என்ன
நிகழ்ந்தது எந்த நொடியிலாயினும்
ஒவ்வொரு நொடியும்
நிகழ்ந்து கொண்டே இருக்கிறது
சந்திப்பு
நீ
கேள்விகள் கேட்கிறேன் நான்
மெளனம் காக்கிறாய் நீ
கோபம் கொள்கிறேன் நான்
புன்னகை பூக்கிறாய் நீ
விளையாட்டாய் சண்டையிடுகிறேன் நான்
ரசித்து சிரிக்கிறாய் நீ
கவலையில் இருக்கிறேன் நான்
ஆறுதலுடன் அணைக்கிறாய் நீ
வேலை செய்ய கூறுகிறேன் நான்
என்னை பார்த்து கொண்டிருப்பதே வேலை என்கிறாய் நீ
இப்படி செய்துக்கொண்டே இருந்தால்
எப்படி உன்னை காதலிப்பதை நிறுத்துவதாம்…...
அதற்கும் கூறுகிறாய்
நிறுத்த வேண்டாம்
இன்னும் அதிகமாக காதலி என்று........
Wednesday, March 27, 2013
வன்முறை
ஊரெங்கும் கேட்கின்றது
மனிதாபிமானத்தின் குரல்
ஓங்குகின்றன
நியாயத்தை தேடி
உரிமையை தேடி
போராட்டங்கள்
நிகழ்கின்றன
பொது சாலைகளில்
கடற்கரையில்
ரயில் தண்டவாளங்களில்
கண்டனங்கள்
ஆயினும்
எதையும் பொருட்டாக மதியாது
தொடர்கின்றது
மனிதாபிமானத்தை தொலைத்த
ஆனால் மனித உருவில் இருக்கும்
கொடுமையளர்களின்
ஐந்தறிவு உயிர்களிடத்தினும்
கீழானவர்களின்
கீழானவர்களின்
ஒழிக்க முடியாத வன்முறை
உலகம் அழியப்போவதில்லை இயற்கையால்
ஆனால்
அழிக்கப்படத்தான் போகிறது
இத்தகைய வன்முறையாளர்களால்......
Monday, March 25, 2013
இலையுதிர் காலம்
ஆரம்பமாகி விட்டது
இலையுதிர் காலம்
சின்ன துளிர்களாக தோன்றி
மரத்தின் ஆதரவில் மகிழ்ச்சியோடு ஒன்றி
அதன் ஊட்டச்சத்தின் ஒரு பங்கை உறிஞ்சிக்கொண்டு
ஒவ்வொரு நாளும் செழித்து வளர்ந்து
கொண்டாடிய காலம் முடிந்தது...
சீராட்டிய மரத்தின் பந்தம்
அறுந்தது
ஒரு நொடியில்
முதியோர் இல்லத்தில்
விட்டு சென்ற மகனின்
சொந்தத்தை போலவே..........
Sunday, March 24, 2013
ஊடலும் கூடலும்
எதோ சிறு விஷயம்
என் தப்பு தான் என்று நீ குற்றம் கூற
உனது தப்பே என்று நான் வாதாட ....
உனது தப்பே என்று நான் வாதாட ....
நீ பொறுப்பில்லாதவள் என்று கூற
பொறுமையில்லாதவன் என நான் சாட...
அன்பில்லை உனக்கு என்க
என்னை புரிந்து கொள்ளவில்லை என்று நான் ஏங்க...
ஆரம்பமானது
அழுகையும் கோபமும் நிறைந்த போர்க்களம்
வார்த்தைகள் தடிக்க
விட்டுக்கொடுக்க மறுத்து இருவரும் வளர்க்க
முடிவில் குடிக்கொண்டது மெளனம்
தடித்த வார்த்தைகளை தாங்கிய மனது
தவித்தது உன் மெளனத்தை தாங்காமல்
சற்று பொறுத்து
உன்னை மீறி உன் கரங்கள் எழ
ஊடலின் காரணம் மறக்க.......
ஊடல் கூடலானது
உன் அணைப்பினில்........
Friday, March 22, 2013
என் தோழிகள்
எனக்கு தோழிகள் இருக்கின்றனர்
எப்பொழுதும் சிரிக்கின்ற
நான் திட்டினாலும் வாங்கி கொண்டு அமைதி காக்கின்ற
என் புலம்பல்களை கேள்வி இல்லாமல் கேட்டுக்கொள்கின்ற
நான் அடித்தாலும் வாங்கிகொள்கின்ற
தனிமை தாக்குகையில் அணைத்துக்கொள்கின்ற
என்னை குறை கூறாத
எப்பொழுதும்
என்னோடு விளையாடுகின்ற தோழிகள்
என்னோடு விளையாடுகின்ற தோழிகள்
பொறுங்கள்
என்ன
நம்ப முடியவில்லையா...
இருக்க முடியாதா
அப்படி பட்ட தோழிகள்.....
ஏன்?
என் அறையில் வந்து பாருங்கள்
அப்படிப்பட்ட தோழிகளை
Thursday, March 21, 2013
காதல் கவிதை
காதல் ஒரு கவிதை தான்
அன்பான பார்வையில்
அழகான பேச்சினில்
வயதையும் உருவத்தையும் கடந்த அன்பினில்
விட்டுக்கொடுக்கும் பண்பினில்
தன்னை மீறிய நேசத்தில்
கவிதையின் அழகு சார்ந்து இருக்கிறது
அதை எழுதும் மனிதனின் வார்த்தைகளில்
காதலின் அழகு சார்ந்து இருக்கிறது
காதல் புரியும் அன்பாளர்களின்
நேர்மையான அன்பினில்....
Wednesday, March 20, 2013
சிறு வயது ஞாபகம்
தெரியவில்லை
இன்னும் எத்தனை காலங்கள்
வாழ்வோம் என்று
ஆனால்
நினைவில் என்றும் தங்குகிறது
பள்ளி நண்பர்களும்
விளையாடிய விளையாட்டுக்களும்
வகுப்பில் புரிந்த குறும்பு செயல்களும்
கட்டுபடுத்திய தூக்கமும்
வாங்கிய திட்டுக்களும்
ஒவ்வொரு தேர்விற்கும் பயந்ததும்
இரவு நேர படிப்பும்
தேர்வு கடைசி நாளின் விடுமுறை எதிர்ப்பார்ப்பும்
பள்ளி திறக்கும் நாளின் காலை புலம்பலும்
கூப்பிட்டு கொண்ட பட்ட பெயர்களும்
ஓவ்வொரு நண்பருக்கும் இருக்கும் விசேஷ சம்பவங்களும்
பிடித்த ஆசிரியர்களும் நாம் திட்டிய ஆசிரியர்களும்
பண்டிகைக்கு பத்து நாள் முந்திய உற்சாகமும்
தீபாவளி புத்தாடையும் பட்டாசு கொண்டாட்டங்களும்...
பள்ளி கலை நிகழ்ச்சிகளும்
கலந்து கொண்ட விளையாட்டு போட்டிகளும்
இப்படி
நாம் அறியாமல் சேர்க்க பட்டுள்ளது
சிறு வயது ஞாபகங்கள்
நம் மனதில் பொக்கிஷமாக.....
Tuesday, March 19, 2013
எதிர்பார்ப்புகள்
எனக்காக நீ தேடி அலைய வேண்டாம்
அழகான நகைகளுக்கோ
வித விதமான உடைகளுக்கோ
பஞ்சடைத்த பொம்மைகளுக்கோ
வாசனை பொருட்களுக்கோ....
ஏனெனில் என் தேவைகள் அவை அல்ல
என் தேவைகள் மிகவும் சிக்கனமானது
சொல்லவா.........
காலை எழுந்ததும் என்னை நோக்கி ஒரு புன்னகை
ஏதேனும் சிறு தவறு நேர்ந்தால் புரிதலோடு ஒரு பார்வை
மனம் சோர்வுறும் வேளையில் சின்ன அணைப்பு
சண்டை இடும் போதும் காட்டும் அக்கறை
எங்கு சென்றாலும் ஏதேனும் இரண்டு நொடியில் ஒரு தொலைபேசி விசாரிப்பு
இவை அனைத்திற்கும் மேலாக
என்றென்றும் என் மேல் நம்பிக்கை
இது போதும்
வாழ்நாள் முழுமைக்கும்
Subscribe to:
Posts (Atom)


+Wallpapers+11.jpg)
+Wallpapers+3.jpg)








