Tuesday, August 6, 2013

ஆயிரம் கேள்விகள்


என்னை விட்டுச் சென்றது ஏன் ?

என்னை எதிர்ப்பார்க்கவில்லையா ?
எனக்கு பொறுப்பெடுக்க உனக்கு பலமில்லையா ?

என்னை பார்த்த நொடியில் பிடித்ததா ?
என்னை என்றேனும் எண்ணுவாயா ?

எனக்கு ஏதேனும் இடம் உள்ளதா உன் மனதில் ?

ஆயிரம் கேள்விகள்
உன்னிடம் கேட்க

விட்டுச் சென்றுக்கெல்லாமே அம்மா !!!

என் புறக்கணிப்பிற்கான காரணத்தையும் 
என்னை விட்ட அநாதை இல்லத்திலே....

காரணத்தையேனும் பற்றிக்கொண்டு இருப்பேனே
உன்னக்காக ஏங்கும் ஒவ்வொரு நாளும்.........


  

மறதி


செல்ல சண்டையிடுகிறாய் 
உன்னை மறந்து விட்டேன் என்று 

சிணுங்கும் உன் முகம் கண்டு 
சிறு புன்னகையுடன் 
எண்ணுகிறேன்

மறந்தாலும் 
என்னை உன்னிடம் மறப்பேனன்றி 
உன்னை அல்ல என்று .....

காரணம் தெரியாவிடினும் 
என் புன்னைகை கண்டு 
விரிகிறது உன் முகம்

எனக்கே எனக்கான 
குறும்பு முறுவலுடன் !!!!!

திருட்டுத்தனம்


உன் சிறு தொடுகையிலும் 
சிலிர்த்து கூத்தாடும் 
என் மனதை 
வேலியிடவே முற்படுகிறேன்....

ஆயினும்  திருடனாய் 
எட்டித் தாவி விடுகிறாய் 

கொள்ளையிட்டு செல்கிறாய் 
ஒவ்வொரு முறையும் 
வேலியோடு
என் மனதையும்...

சொல்லி விட்டு செல்லேன் 
அடுத்த முறையேனும் 
உன் திருட்டுத்தனத்தின் யுத்தியை  

முயற்சிக்கிறேன் 
உன் திருட்டை 

இன்னும் எளிதாக்க !!!!!

இரவுக்கனவு


தூக்கமில்லா இரவினில் 
ஒரு நாள் 


நிலவின் ஒளி வீசும்  ஜன்னலில் 
மந்தகாசமான புன்னகையுடன் 
உன் முகம் 

நிஜம் எனவே புன்னகைக்கிறேன் 
உன் முகம் பார்த்து 

பொறாமையுற்ற காற்று
நினைவுகளை கலைக்கும் வரை..........

Friday, August 2, 2013

என் மனம் முட்டாளே !!


காரணங்கள் இன்றி
நீ விலகுகையில்

கூறிட இல்லை என்னிடம்
சமாதானங்கள்

துடித்திடும் என் மனதுக்கு..

விலக்கத்தின் வலியிலும்
கோபப்பட மறுக்கிறது உன்னிடம் 
என் மனம்...

தன்மானம்
ஏற்றுக் கொள்ளா விடினும் 
ஒற்றுக்கொள்ளவே வேண்டும்

உன் வரை
என் மனம் முட்டாளே !!!!

Wednesday, July 3, 2013

பிழை

நீ
கட்டிக்கொள்ள விழைந்த நேரங்களில்
தட்டிக் கழித்து சென்றவள்

உன்னோடு 
இணைய விழைகளில்
எட்டிச் செல்வதென்ன
நண்பனே..

பிழையானது
நான் இணைய விழைந்த நேரமா?
அன்று தட்டிக் கழித்த நானா?

விடையின்றி தவிக்கிறேன்

நீ 
என்னை விழைந்த 
பொழுதுகளின் நினைவிலும்..

நீ 
என்னை சேரும் 
பொழுதின் எதிர்ப்பார்ப்பிலும் ..

மழைக் கால மாலை பொழுதொன்று


மழைக் கால மாலை பொழுதொன்று  
கழிந்தது  
சுகமாக உன்னோடு ....

காரிருள் மேகங்களாய் 
சூழ்ந்திடும் 
உன் எண்ணங்கள்....

சில்லென்ற தூறல்களாய் 
சிலிர்ப்பூட்டும் 
உன் அருகாமை....

மின்னலின் ஒளிக்கு போட்டியாய்  
கள்ளத்தனம் கூத்தாடும் 
உன் பார்வை....

இடியின் முழக்கத்தின் மீறலாய்
பிரதானமான 
உன் சிரிப்பு சத்தம்....

புன்னகை நெருக்கமாக
உன் தோள் வளைவில் 
என் முகம் பதிய 
நம் ஒரு குடைக்குள் 
மழைச் சாரல்.....

இனியதொரு மழைக்காலம்
நினைக்கவும்
இனிக்கவும்
நமக்கே நமக்கான
ஒரு செல்ல மாலை பொழுதாய்......


Wednesday, June 19, 2013

மழைக்காலம்


இன்று 
குடையுடன் மழையில் 
தனித்து நடக்கையில் 
புரிகிறது 

அன்று 
நனைந்துக் கொண்டு 
விளையாடிய படி 
உன்னுடன் நடந்த 

மழைக்காலத்தின் 
திருப்தி.........

Friday, June 7, 2013

வெம்மை


மழை வரும் போதெல்லாம்
தவறின்றி தோன்றும்
உன் ஞாபகங்கள்..

வலியோ
தனிமையோ
தவறுவதில்லை
உன் நினைவுகள்...

குடைகள் தடுக்கும்
மழை துளிகளை

எது தடுக்கும்
உன் நினைவை

மழையின் துளிகளால்
மண் குழுமை!!

உன் நினைவுகளால்
என் மனம் வெம்மை!!


Sunday, May 19, 2013

விருப்பம்




தேவையின்றியே 
தேவை படுகிறது
உன் அருகாமை.....

தூக்கத்திலும்
தூக்கம் கலைக்கிறது
உன் நினைவு.....

புன்னகைத்தே
புன்னகை பூக்க வைக்கிறது
உன் முகம்......

நேசித்தே
நேசம் கொள்ள வைக்கிறது
உன் மனம்.....

ஆகவே

என்
விருப்பமின்றியே
விரும்புகிறது உன்னை

என் மனம்.........

Thursday, May 16, 2013

இறுதிக் குரல்




கண்களை சுழற்றினேன்
நாற்புறமும்..

சுற்றிலும் ஓலக் குரல்கள்

என் அன்புக்குரியவர்களின்
கண்களில்
கண்ணீர் வெள்ளம்......

சொல்லத் துடிக்கிறேன்

என் எண்ணங்களை
என் ஆசைகளை

ஓய போகும்
என் வாழ்க்கையின் அவலத்தை....

முடியவில்லை

சொல்லத் துடிக்கும் வார்த்தைகள்
அடங்கியது
தொண்டை குழிக்குள்

சற்று நேரத்தில்
குழிக்குள் அடங்க போகும்
என் உயிரை போலவே...

விடைபெறுகிறேன் இறுதியாக

மெதுவாக
வாகனத்தை ஓட்டியிருக்கலாம்
என்ற வேதனையோடு.......



Wednesday, May 8, 2013

அஃறினை



எட்டிப் பிடிக்கிறேன்
கைக்கெட்டாத நிலவை..

முகர்ந்து பார்க்கிறேன்
காகித பூவை..

பேசுகிறேன்
அசையாப் பொருட்களோடு...

பைத்தியமென நினைக்க வேண்டாம் !!!

ஏமாற்றும் சூழ்நிலையில்
எவரையும் நம்ப இயலாத இந்நாளில்

தனிமையின் பாதுக்காப்பான துணை

அஃறினையான
பேசாத பொருட்களும்
எட்டாத நிலவும் மட்டுமே .... !!!




Thursday, May 2, 2013

நட்பு



ஆண்டுக்கணக்கில்
பாராது
பேசாது
இருந்த பொழுதிலும்

கடைசி நாள் பேச்சின்
தொடர்ச்சியாகவே

இன்றும்

சிறிதும் மாற்றம் இல்லை
தோழமையில்!!!!

எத்தனை காலம் ஆனபோதிலும்
எத்தனை தூரத்தில் இருந்த போதிலும்

எதிர்ப்பார்ப்புகளின்றி
அதே புரிதலோடு

என்றும்

துளிர்த்தேஇருக்கிறது
உண்மையான நட்பு...





Monday, April 29, 2013

முடிவு நேரம்


மனமில்லாத சிலருக்கு

வந்து விட்டது
தாய் பாசத்தின்
முடிவு நேரம்...

மூட்டைக்கட்டியாகி விட்டது
பொருட்களோடு
அம்மாவையும்....

இனி தேவை இல்லையாம்

தன் மூன்று வயது
குழந்தையை கவனிக்க

ஒரு ஆள்....





Friday, April 26, 2013

தோன்றாத் துணை



தன் நலத்தை விட
என் நலமே பெரிதாய்

கவலைகள் தன்னை வாட்டும் போதும்
என் மகிழ்ச்சியே முக்கியமாய்..

என் அனைத்து செயல்களிலும்
தோள் கொடுக்கும் துணையாய்..

நானிருக்கிறேன் என்று
எனக்கு  பாதுக்காப்பாய்..



திட்டினாலும்
என் நன்மைக்காய்..

என் அனைத்து கேள்விகளுக்கும் பதிலாய்..
என் பயங்களை ஒழிப்பவராய்..
பின்னிருந்து ஆதரவளிக்கும் சக்தியாய்..


எத்தனை வயதானாலும்
என்னை கைப்பிடித்து நடத்தும் வழிக்காட்டியாய்..

என்றும் என்னோடு இருக்கும்
தோன்றாத் துணை


மறு வார்த்தையில்
அப்பா.....








Thursday, April 25, 2013

கோபம்


வார்த்தைகள் தேவையல்ல
பூக்களும் அவசியமல்ல

மன்னிப்பு கோரவும் வேண்டாம்

என் மனம் நாடுவதெல்லாம்
சிறு புன்னகை மட்டுமே

உன் கோபங்களின்
முடிவு
சுகமாய் அமைந்தால் நன்று..

அடுத்த முறையும்
ஆவலுடனே எதிர்ப்பார்ப்பேன்
உன் கோபத்தை !!

சுகமான முடிவின்
நினைவில்…..


காயம்



வலிக்கின்றது
ஒவ்வொரு முறையும்

நீ
என்னை காயப்படுத்துகையில்

சிறு விஷயங்கள்
மிக பெரிதாக

பேசும் வார்த்தைகள்
முள் தைக்க

ஏனோ மறந்து விடுகிறாய்

காயப்படுத்துவது
என்னை மட்டுமல்ல
உன்னையும் இணைத்தே என்பதை...

மெளனமாக காத்திருக்கிறேன்
வலியோடு....

என் மீதான அன்பு
உன் கோபத்தை மறைக்கும்
நிமிடத்தை எதிர்பார்த்து........